புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டத்தில் குரங்கு புகுந்து அட்டகாசம் செய்ததால் அதிகாரிகள் பயந்து அலறிய சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று கஜா புயல் நிவாரணப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான இந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். மேலும் அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பேச தொடங்கினார். அப்போது குரங்கு ஒன்று அந்த கூட்ட அரங்கிற்குள் புகுந்து, ஆங்காங்கே தாவியது. அதனை கண்டு அங்கிருந்த அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் பயந்து அலறினர். அரங்கில் புகுந்த குரங்கை விரட்ட முயற்சிக்கும்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் அமர்ந்திருந்த டேபிள் முன்பு குதித்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அரங்கில் உள்ள ஜன்னல் கதவு வழியாக அந்த குரங்கு வெளியேறியது. அதன் பின்னரே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.