மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கேற்ப ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் என்று, ஒன்றிய அரசின் 15ஆவது நிதி ஆணையம் நிபந்தனைகள் விதித்துள்ளதாக தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 2022 - 23 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெற, 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசின் 15 ஆவது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு விளக்கியுள்ளது.
பொருளாதார குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில், சொத்து வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்தக் காரணங்களின் அடிப்படையில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் சொத்து வரிகள் உயர்வு – முழு விவரம்