அரசுத்துறை செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசுத்துறை செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
அரசுத்துறை செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
Published on

அரசுத்துறை செயலாளர்கள் சில நிதி விவகாரங்களில் நிதித்துறையின் ஒப்புதலை பெறத் தேவையில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக நிதித்துறையுடன் கலந்தாலோசனை செய்து ஒப்புதல் பெறாமலேயே சில பொருண்மைகளில் நிதி தொடர்பான முடிவுகளை அரசுச் செயலாளர்கள் எடுக்க முடியும் என்று அவர்களுக்கு அதிகாரம் அளித்து ஏற்கனவே கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பரில் அரசு ஆணை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் செயலாளர்களிடம் இருக்கும் இந்த அதிகாரத்தை மேலும் அதிகரித்து, மேலும் சில கூடுதல் நிதி விவகாரங்களில் நிதித்துறையின் ஒப்புதலை அவர்கள் பெறத் தேவையில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ற வகையில் முந்தைய அரசாணையில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

பராமரிப்பு செலவு

அதன்படி, 6 மாதங்களுக்கு பணியாளருக்கு பணி நீட்டிப்பு வழங்கலாம். அனுமதிக்கப்பட்ட ரூ.75 லட்சம் தொகையில் ரூ.25 லட்சம் அளவுக்கு அலுவலக பராமரிப்பு, பழுது பார்த்தல், உபகரணங்கள் கொள்முதல் செய்வது போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கலாம்.

சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசு வக்கீல்களுக்கு சம்பளம் வழங்குவது, சில நிபுணர்களின் சேவைக்கு ஊதியம் அளிப்பது போன்றவற்றுக்காக நிதித்துறையின் அனுமதியைப் பெறாமல் அந்தந்தத் துறை செயலாளரே அனுமதி அளிக்கலாம்.

விழாச் செலவுகள்

அரசு அலுவலங்கள் இயங்கிவரும் கட்டிடங்களுக்கான வாடகையை நிர்ணயிக்கும்போது, ஏற்கனவே கொடுத்து வரும் வாடகையில் அதிகபட்சம் 15 சதவீதம் வரை உயர்த்தி புதிய வாடகையை நிர்ணயிக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் அரசுத் திட்ட அடிக்கல் நாட்டு விழா, தொடக்க விழா போன்ற அரசு விழாக்களுக்கு ரூ.4 லட்சம் வரையிலும், மாநில அளவில் ரூ.10 லட்சம் வரையிலும் செலவு செய்ய செயலாளர் அனுமதிக்கலாம். கருத்தரங்கம், மாநாடு நடத்தவும் ரூ.10 லட்சம் வரை செலவை அனுமதிக்கலாம்.

பயணச் செலவு

அரசுத் துறை தலைவரின் உள்ளூர் பயணத்திற்கு அரசு அனுமதி அவசியம் இல்லை. வெளியூர் பயணங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்றாலும் நிதித்துறையின் அனுமதியைப் பெற தேவையில்லை. வெளிநாடு பயணத்திற்கு மட்டுமே அரசு மற்றும் நிதித்துறையின் அங்கீகாரத்தை பெற வேண்டும்.

சம்பள முன்பணம் வழங்குவது, குறிப்பிட்ட காலகட்டத்துக்கான நிதி டெபாசிட், போலீஸ் துப்பாக்கி சூட்டினால் நடந்த சாவு, சமூக வன்முறையில் நடந்த சாவு, போலீஸ் காவலில் நடக்கும் மரணம் ஆகியவற்றுக்கான இழப்பீட்டை வழங்க நிதித்துறையின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-எம்.ரமேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com