அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலைமையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு ஓ பன்னீர் செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பால் என்னென்ன விளைவுகள் எல்லாம் ஏற்படப் போகிறது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுகூட்டம் மதுரவாயலில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிபி பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்டார்.
இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம் ஜே சி டி பிரபாகர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டது, அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது ஆகியவையும் செல்லாததாக மாறியுள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் தனித்தனியே புதிய நிர்வாகிகளை நியமித்தார்கள். அந்த நியமனங்கள் அனைத்தும் செல்லாததாக மாறியுள்ளது.
பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்ட பிறகு கட்சியினுடைய வரவு செலவு கணக்குகளை தன்னிடம் தான் வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் சீனிவாசன் தரப்பிலிருந்து அதிமுக வரவு செலவு கணக்குகளை வைத்திருக்கக்கூடிய வங்கிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இனி அதிமுக வரவு செலவு கணக்குகளை யார் பார்ப்பார்? பொருளாளராக ஓபிஎஸ் தான் தொடர்வார் என்றால் ஓபிஎஸ் இடம் தான் கணக்கு வழக்குகள் எல்லாம் கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராயப்பேட்டையில் அமைந்திருக்க கூடிய அதிமுக கட்சியினுடைய தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு, அதன்படி சாவி எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தீர்ப்பின் மூலம் கட்சி தலைமை அலுவலகம் யார் வசம் இருக்கும்? ஓபிஎஸ் பழையபடி கட்சி அலுவலகத்துக்கு செல்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
இவை தவிர சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார், சட்டமன்ற துணைதுணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இந்த நியமனம் தொடர்பான கடிதம் சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.