"குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம்

நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக, செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை ரத்து செய்யக் கோரி செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்புதியதலைமுறை
Published on

குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக, செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை ரத்து செய்யக் கோரி செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், மனுதாரரின் உதவியுடன் போலி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதோடு, போலி ஊதியச் சான்று தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் வங்கியில் கடன் பெறப்பட்டு, 3 கோடியே 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இது அனைத்துமே மனுதாரரின் உதவியுடன் நடைபெற்றதாலேயே குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இவை அனைத்தும் தனி நபர் சார்ந்த குற்றங்கள் எனவும் போலீசார் விசாரணை நடத்தி அந்த பணத்தை மீட்கலாம் எனக்கூறி, செல்வராஜ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், யார் குண்டர்கள் என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டுமெனவும், இது போல குண்டர் தடுப்புச் சட்டத்தை சாதாரணமாக பயன்படுத்தப்படுவதை நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக ஒருவர் ஒரு நாள் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தாலும், அது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com