கோவையில் போலி தங்கக் கட்டியை கொடுத்து ஐந்து லட்ச ரூபாய் ஏமாற்றிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் அலாவுதீனுக்கு, கடந்த 20-ஆம் தேதி தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில், மண் எடுக்கும் கூலி வேலை செய்யும்போது, 15லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டி ஒன்று கிடைத்துள்ளதாகவும், பத்து லட்ச ரூபாய் கொடுத்தால் தங்கக் கட்டியை கொடுத்து விடுவதாகவும் தொலைபேசியில் பேசிய நபர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி, ஷேக் அலாவுதீனும், அவரது மனைவி நெசிலாவும் சேர்ந்து ஐந்து லட்ச ரூபாய் பணத்துடன் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது, தொலைபேசியில் பேசிய நபர், தங்கக் கட்டியை கொடுத்துவிட்டு ஐந்து லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டனர். வீட்டிற்கு வந்த பார்த்தபோது, அது தங்க முலாம் பூசப்பட்ட கட்டி எனத் தெரிய வந்தது. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதையறிந்த தம்பதி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்த காவல்துறையினர், போலி தங்கக் கட்டி கொடுத்து ஏமாற்றிய தம்பதியினரின் உறவினர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், மோசடியில் ஈடுபட்டதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.