காட்டுயானை சின்னத்தம்பி குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னத்தம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். ஆனால் அதன் பின்னரும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கண்ணாடி புத்தூரில் சின்னத்தம்பி யானை முகாமிட்டது.
அப்போது அதன் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக கூறி சின்னத்தம்பி அருகில் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பியை வனத்துறையினர் பிடித்தனர். பின் சுயம்பு மற்றும் கலீம் என்ற கும்கி யானைகள் உதவியுடன் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கூண்டில் சின்னத்தம்பி அடைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த சின்னதம்பி யானைக்கு உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வந்தது. சின்னதம்பி யானைக்கு வனத்துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த உணவு, புட் பாய்சன் ஆகியதால் வயிற்று போக்கு ஏற்பட்டு, யானையின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வந்தது.
இந்த சூழலில் இது குறித்து பதிலளித்துள்ள வனத்துறை, சின்னத்தம்பி நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக (கள) இயக்குனர் கணேசன் மற்றும் துணை இயக்குனர் மாரியப்பன் ஆகியோர் மேற்பார்வையில், வனசரகர் தலைமையில் சின்னத்தம்பி யானை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, நல்ல உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. எனவே யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.