செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி வெங்கடேஷ். இவரது வீட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் விவசாய தொழில் நிமித்தமாக வெளியே சென்று விடுவது வழக்கம். இந்நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவரது வீட்டு மின் கட்டணமாக அதிகபட்சமாக 100 ரூபாய் வரை மட்டுமே செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இவரது மொபைல் போனுக்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், இவரது வீட்டு மின் இணைப்பு எண்ணிற்கு கட்டணமாக 8 லட்சத்து 75 ஆயிரத்து 550 ரூபாய் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஓசூர் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ரீடிங் பதிவு செய்யும்போது தவறுதலாக கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட மின்சாரம் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது விரைவில் அது சரி செய்து தரப்படும் என்று தெரிவித்தார்