ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான உபகரணங்களை தமிழ்நாடு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது இந்திய தேர்தல் ஆணையம்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மாநில தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தலுக்கான உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டது. குறிப்பாக தேர்தலுக்கு தேவையான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, மை மற்றும் தேர்தல் முத்திரை ஆகியவை தமிழக தேர்தல் துணை அதிகாரி ஸ்ரீதர் மற்றும் தமிழக சட்டப்பேரவை துணைச் செயலாளர் ரமேஷ் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தல் உபகரணங்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் திகார் போலீசார் பாதுகாப்புடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து மீண்டும் தமிழ்நாடு மற்றும் டெல்லி போலீசாரின் பாதுகாப்புடன் டெல்லி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு விமானம் மூலமாக இன்று இரவு 7 மணிக்கு சென்னை வந்தடைகிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து போலீசார் பாதுகாப்புடன் தமிழக சட்டமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக தனி அறையில் வைக்கப்பட உள்ளது.