யானைகள் வளர்ப்பு குறித்த The Elephant Whisperers ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருது அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆவணப்படத்தின் மூலம் பொதுவெளிக்கு மிகுந்த பரிச்சயமான யானைகளை வளர்த்து பராமரித்து வரும் பொம்மன் - பெள்ளி தம்பதியரை சந்திக்க வருகிற ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி நீலகிரியில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு வருகிறார். இதற்காக தெப்பக்காடு பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி சந்திக்க உள்ள பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 3 போலீசார் தம்பதியின் வீட்டில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொம்மன் யானையை பராமரிக்கும் பணிக்கு செல்லும்போதும் காவலர்கள் அவருடன் பாதுகாப்பிற்காக செல்கின்றனர்.
தம்பதியர் இருவரையும் பிரதமர் மோடி சந்திக்கும் வரை இந்த பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொம்மன் - பெள்ளி தம்பதியரை சந்திக்க வரும் அனைவரும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.