பொள்ளாச்சி அருகே சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டதில், யானை வெடிமருந்து உட்கொண்டதால் தான் இறந்துள்ளதாக முடிவு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காரமடையில் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் மெலிந்த நிலையில் இருந்த பெண் காட்டு யானையை வனத்துறையினர், கும்கி யானை உதவியோடு மயக்க ஊசி செலுத்தி கடந்த 17ஆம் தேதி பிடித்தனர். பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் வனப்பகுதி வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைத்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.
இதையடுத்து இன்று இறந்த யானையை கால்நடை மருத்துவக் குழுவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து உடற்கூறு ஆய்வு செய்தனர். அப்போது இறந்த காட்டு யானை வெடிமருந்து உட்கொண்ட போது வெடித்ததில் பற்கள் மற்றும் தாடை உடைந்ததால் உண்ண முடியாமல் இறந்து இருப்பதாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆண் காட்டு யானை தந்ததால் குத்தியதால் தான் உணவு உட்கொள்ள முடியவில்லை என வனத்துறையினர் தெரிவித்து வந்த நிலையில், உடற்கூறு ஆய்வில் வெடி மருந்து உட்கொண்டதால் தான் யானை இறந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெடி மருந்து யார் வைத்தது என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.