கோவை அன்னூரில் செயல்பட்டு வரும் சிவா டெக்ஸ்யான் நிறுவனம் கண்டுபிடித்துள்ள 100 சதவிகிதம் மக்கும் பருத்தி ப்ளக்ஸ் பேனர்ஸை மக்களிடம் கொண்டு செல்ல கோவை மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.
மக்காத ப்ளாஸ்டிக் ப்ளக்ஸுக்கும் மாற்றாக 100 % மக்கும் பருத்தி ப்ளக்ஸ் பேனர்ஸ் வந்துவிட்டது. அதிகமாக கவனிக்கப்படாத ஆனால் மிகவும் ஆபத்தான பிவிசி எனப்படும் மக்காத ப்ளக்ஸ் பேனர்ஸ் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் single use பிளாஸ்டிக் வகையில் வரக்கூடியது. இல்ல சுப நிகழ்ச்சிகளில் தொடங்கி அரசியல் கட்சி, நிறுவன விளம்பரங்கள், கடையின் விபரங்கள் அறிவிப்பு பலகைகளாக, பதாகைகளாக என பல நிலைகளில் ப்ளக்ஸ் பேனர்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. ஆனால், இந்த ப்ளக்ஸ் பேனர்களின் முக்கிய வேதியியல் கூரான பிவிசி அதாவது POLYVINYL CHLORIDE மறுசுழற்சி செய்ய முடியாததால், பயன்பாட்டுக்கு பிறகு நேரடியாக நிலத்தில் வீசுவதால் நீர்நிலைகள் மாசுபாடும், எரிப்பதால் வெளியாகும் புகை மனிதர்கள் உட்பட உயிரினங்களுக்கு பல உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முழுமையாக மக்கும் பருத்தி ப்ளக்ஸ் பேனர் ரகத்தை கோவையை சேர்ந்த சிவா டெக்ஸ்யான் நிறுவனம் உருவாக்கியுள்ளது. முழுவதும் பருத்தி துணியில் செய்யப்பட்டுள்ள இந்த ப்ளக்ஸ் பேனர் ஒரு மாதத்தில் 58 சதவிகிதம் என்ற அடிப்படையில் இரு மாதங்களில் முழுமையாக மக்கும் தன்மை கொண்டவை.இந்நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த ரகத்தை சாத்தியப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்கள் இந்த ரக பேனர்களை பயன்படுத்த முன்வந்துள்ளதாகவும் கூறுகின்றனர். 90 சதவிகித பிவிசி ப்ளக்ஸ் பேனர்கள் சீனா, கொரியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் பிவிசி பேனர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரு சதவிகிதம் மட்டுமே மறுபயன்பாடு, அதாவது சாலையோர கடைகளுக்கு போர்வையாக, செயற்கையான நீர்நிலைகள் கட்டமைப்பு போன்ற தேவைகளுக்கு பயன்படுகிறது. அதுவும், நாளடைவில் பழையதானதும் தூக்கி எறியப்படுகிறது. இந்நிலையில், இந்தப் பருத்தி ப்ளக்ஸ் பேனர்கள் குறித்து பொதுமக்களிடையே, வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகராட்சிதிட்டமிட்டு வருகிறது.