இறந்து போன காவலாளி ஒருவரின் உடலை எடுக்க விடாமல் பாசப்போராட்டம் நடத்திய நாயும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
நெல்லை மாவட்டம் குருந்துடையார்புரத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர், பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் என்பவரது வீட்டில் கடந்த 5 வருடங்களாக காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்றதால் இரவில் காவலாளி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 6 மணி அளவில் காவலாளி பன்னீர்செல்வம் வீட்டின் வாசலில் கீழே விழுந்த நிலையில் கிடந்துள்ளார். காவலாளி 4 வருடங்களாக பராமரித்து வந்த ஆஸ்திரேலிய வகை நாய் மட்டும் அவரை சுற்றிச்சுற்றி வந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பெருமாள்புரம் காவல்நிலைய ஆய்வாளர் ஜென்சி மற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அந்த நாய் அன்பினால் பன்னீர்செல்வத்தை விட்டு நகர மறுத்தது. யாரையும் அருகில் நெருங்கவிடாமல் குலைத்துள்ளது. நாயின் அருகே யாரும் செல்ல முடியாமல் தவித்தனர்.
இதனிடையே பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் நாய் கடித்துதான் அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து, பின்னர் காவல்துறையினர் கயிற்றை கொண்டு நாயை பிடிக்கும் முயற்சியில் பல மணிநேரம் ஈடுபட்டனர். நாயைப் பிடிக்க வீசிய கயிறு அதனுடைய கழுத்தில் இறுகியதால் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
பின்னர் காவலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தது தெரிய வந்தது. சுமார் 5 மணி நேரமாக காவலாளியின் உடலை எடுக்க விடாமல் பாசப்போராட்டம் நடத்திய நாயும் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.