திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தலைமையில் 37 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் நடை பயணமாக கடந்த 23-ந்தேதி புறப்பட்டனர். இவர்கள் பாதையாத்திரை 24ஆம் தேதி திங்கட்கிழமை புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அடுத்த குச்சிபாளையம் அருகே வந்தபோது அந்தப் பகுதியில் இருந்த நாய் பக்தர்களை பின்தொடர்ந்தது. பக்தர்கள் பலமுறை நாயை விரட்டி அனுப்ப முயற்சி செய்த நிலையில் தொடர்ந்து பக்தர்களுடன் பாதயாத்திரையாக அந்த நாயும் நடக்கத் தொடங்கியது.
புரட்டாசி மாதத்தையொட்டி ஆன்மீக பயணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையை மேற்கொண்ட தங்களுடன் நாயும் பாதை யாத்திரை மேற்கொள்கிறதோ என்று என்னிய பக்தர்கள் நாய்க்கு தாங்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற ஆடையை போன்று நாய்க்கும் மஞ்சள் துணியை கழுத்தில் கட்டி அந்த நாயை தங்களுடனே அழைத்து வந்தனர். பின்னர் விழுப்புரம், திண்டிவனம்,வந்தவாசி, காஞ்சிபுரம், திருத்தணி,நகரி வழியாக நேற்று மாலை திருப்பதி வந்தனர்.பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்து சென்ற நிலையில் பக்தர்களுடன் அந்த நாயும் தொடர்ந்து நடந்து திருமலைக்கு சென்றுள்ளது.
இதுகுறித்து ராதாகிருஷ்ணா கூறுகையில் எங்களுடன் பாதயாத்திரையாக வந்த நாயை பத்திரமாக எங்கள் ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களுடன் வந்தவர்களில் சிலர் நாய்க்கு பாதுகாப்பாக வைத்துவிட்டு நாங்கள் அனைவரும் தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகு நாங்கள் நாயை பார்த்துக் கொள்வோம். அவர்கள் சென்று தரிசனம் செய்தபிறகு நாயை எங்கள் ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளனர். இந்துக் கடவுள்களில் சிவனின் மற்றொரு வடிவமாக காலபை ரவரை குறிப்பிடுவர். அந்த கால பைரவரின் வாகனமாக இருப்பது நாய். திருப்பதிக்கு பாதையாத்திரை மேற்கொண்ட நாயை இப்போது பக்தர்கள் கால பைரவர் என்றே குறிப்பிடுகின்றனர்.