அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு (LCC) மகப்பேறு இறப்புகளை தடுக்க 'வார் ரூம்' அறிவிப்பு வெறும் கண் துடைப்பு என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் குழுத் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவிட்டுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், அடிப்படை பிரச்சினை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்:
1) மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹு அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அரசு மருத்துவமனைகளில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
2) குறிப்பாக மருத்துவமனைகளில் கழிப்பறைகள் சுகாதாரமின்றி காணப்படுகின்றன. நோயாளிகள் பயன்படுத்தும் நாற்காலிகள், சக்கர நாற்காலிகள், காத்திருப்பு மேசைகள் உடைந்தும், துருப்பிடித்த நிலையிலும் உள்ளன.
3) நோயாளிகள் நலனுக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உரிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும், அதற்கான உரிமம் பெறப்படாததாலும், அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளன. இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
4) மருத்துவமனை வளாகத்தில் கழிவு நீர் தேங்காமல் இருக்க வேண்டும். மேலும் உயிரி மருத்துவ கழிவு மேலாண்மையை செயல்படுத்துவது அவசியம்.
5) இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் (DME) டாக்டர் சங்குமணிக்கு, துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அடிப்படை வசதிகள், சுகாதாரம், உணவின் தரம் ஆகியவற்றை மாதம் ஒருமுறை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
6) அரசு மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய நம் துறை செயலர் உத்தரவிட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம். இருப்பினும் துறையில் உள்ள அடிப்படை தேவைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வை ஏற்படுத்தாமல் மாற்றம் காண முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
7) குறிப்பாக தமிழகத்தில் கிட்டத்தட்ட கடந்த 10, 15 வருடங்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல மருத்துவர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறோம்.
8) அதுபோல செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையும் மிக, மிக குறைவாக உள்ளது. உயிர்காக்கும் துறையில் அடிப்படையாக தேவைப்படும் HR எனப்படும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமிக்காமல், இங்கு மாற்றத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?
9) அதுபோல ஒவ்வொரு மருத்துவமனையிலும் PWD Cvil, Electric உள்பட எந்த குறைபாட்டை சரி செய்வதாக இருந்தாலும் அதற்கு போதிய நிதி கிடையாது. அதாவது மாத்திரை, மருந்து வாங்குவது, முக்கியமான பரிசோதனைகள் செய்வது, கழிவுநீர் குழாய் அடைப்பை சரி செய்வது என எந்த செலவாக இருந்தாலும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) மூலம் வாங்கி கொள்ளுங்கள் என அந்த பொறுப்பையும் மருத்துவர்களின் தலையிலே போட்டு விடுகின்றனர்.
10) இதை தவிர நீண்டகாலமாக அரசு மருத்துவர்களுக்கு இங்கு உரிய ஊதியம் மறுக்கப்படுகிறது. அதுவும் இருக்கிற அரசாணையை (GO.354) அமல்படுத்துவதற்கே நாம் வருடக்கணக்கில் போராடி வருகிறோம்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களையும்,செவிலியர்களையும் நியமனம் செய்யாமல், மகப்பேறு இறப்பை குறைக்க அவசர கால கட்டுப்பாட்டு அறை (War Room) அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது எந்தவகையிலும் உதவாது:
1) தமிழ்நாட்டின் MMR ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக உள்ளது. மகப்பேறு இறப்புகளை தடுக்கும் வகையில் அவசர கால கட்டுப்பாடு அறை (War Room) அமைக்கும் பணியை தமிழக சுகாதாரத் துறை தொடங்கி உள்ளது.
2) விரிவான பிறப்புக்கு முந்தைய திட்டமிடல் முறையை கொண்டு வரவும், ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், பெரிய அளவிலான திறன் வளர்ச்சி சார்ந்த பயிற்சி முகாம்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிந்துரைகள், பாதுகாப்பான கருக்கலைப்பு நடைமுறைகள், துறைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு போன்ற பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்திற்கு சுகாதாரத் துறை செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹு தலைமை தாங்கினார்.
3) இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2014 - 2024 வரையிலான தரவுகளின் படி, 72% இறப்புகள் கிராமப்புறங்களில் நிகழ்ந்தன. மீதமுள்ள 28 % நகர்ப்புறங்களில் நிகழ்ந்தன.
4) தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் MMR பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் MMR ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 55 க்கு மேல் இருப்பது கண்டறியப்பட்டது.
5) சமீபத்தில் மாதிரிப் பதிவு முறை (Sample Registration System) தரவுகளின் படி தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக உள்ளது. தேசிய சராசரி ஒரு லட்சம் பிறப்புகளில் 97 ஆக உள்ளது.
6) நம்மை பொறுத்தவரை, எந்த நாட்டிலும் மிகப்பெரிய போர் மூளும் காலத்தில் கூட, களத்தில் போதிய அளவு படை வீரர்களை நிறுத்தி போரை எதிர்கொள்வதை தான் முக்கிய வியூகமாக வைப்பார்கள். ஆனால் இங்கு ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற போராட வேண்டிய இடத்தில் போதிய மருத்துவர்களை நியமிக்காமல், என்ன சாதிக்க முடில முடியும்?
7) பொதுவாக அனைத்து மகப்பேறுகளும் அதிக ஆபத்துள்ள மகப்பேறாக இருக்கலாம் என்ற வகையில் ஆய்வு செய்து, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட ஆபத்து காரணிகளுடன், எந்தவொரு அவசர நிலையையும் கவனித்து கொள்வதற்கு போதிய மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை என்பது அனைவருக்கும் தெரியும்.
8) போதிய எண்ணிக்கையில் மகப்பேறு மருத்துவர்களை அரசு நியமிக்காததால், வேலைப்பளு மிக அதிகமாக உள்ளது. ஒருபுறம் பணிச்சுமை அதிகம். இன்னொரு புறமோ சிறப்பு மருத்துவர்களுக்கு மிகவும் குறைவான ஊதியம் தரப்படுகிறது.
9) இத்தகைய நிலையில் நெருக்கடியை சந்தித்து வரும் மருத்துவர்கள் பணியில் தொடர முடியாமல், பணியில் இருந்து விலகி விடுகின்றனர். இதனால் தொடர்ந்து பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது.
10) குறிப்பாக சென்னை RSRM மகப்பேறு மருத்துவமனையில் மகப்பேறு துறையில் 24 உதவி பேராசிரியர் இடங்களில் 10 இடங்கள் காலியாக உள்ளது. அதைப்போல வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 26 மகப்பேறு மருத்துவர்களுக்கான பணியிடங்களில் 21 இடங்கள் காலியாக உள்ளது. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 9 மகப்பேறு மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27 மகப்பேறு மருத்துவர்களுக்கான பணியிடங்களில் 20 இடங்கள் காலியாக உள்ளன.
11) தமிழக அரசு ஒருபுறம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை செயல்படுத்தி சாதனை படைத்துள்ள நிலையில், அதற்கு நேர் மாறாக தமிழகம் முழுவதும் மருத்துவர்களை நியமிக்காமல் 'வார் ரூம்' என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டது ஒட்டுமொத்த மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
12) எனவே தமிழகத்தில் மகப்பேறு இறப்பை குறைக்க போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியிமிக்காமல், ' வார் ரூமை' மட்டும் அமைப்பது தீர்வாகாது.
13) பொதுவாக ஒரு பிரசவம் என்பது வலிகள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில், மகப்பேறு மருத்துவர்கள் அதிக பணிச்சுமையுடன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மகப்பேறும் உண்மையில் வலிகளையும், வேதனைகளையும் தருவதாக உள்ளது.
14) ஆகவே தமிழகத்தில் மகப்பேறு இறப்பை வெகுவாக குறைத்திட
(1) ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 2,000 க்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
(2) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 'சீமாங்க்' மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், தேவையான மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
மனநல மருத்துவமனையை தனியார் மயமாக்குவதை கடுமையாக எதிர்க்கிறோம்:
1) 225 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார்மயமாக்கும் உத்தரவு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் மனநல மருத்துவத் துறையை தொடங்குவதோடு, போதிய எண்ணிக்கைய மனநல மருத்துவர்களை நியமிப்பது தான் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். அதை விடுத்து மிகப்பெரிய கட்டமைப்புடன் உள்ள கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையை தனியார் மயமாக்கும் முடிவை அரசு முற்றிலும் கைவிட வேண்டும்.