சங்கரன்கோவில் தனியார் தட்டச்சுப் பள்ளியில் பயின்ற மாணவியை காணவில்லை என அவரது தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து இன்று காலை மர்ம நபர்கள் அந்த பயிற்சிப் பள்ளியை அடித்து நொறுக்கினர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 1வது தெருவில் தனியார் தட்டச்சு பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இருமன்குளத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் என்பவரின் மகள் சுப்ரியாவும் இங்கு தட்டச்சு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் மருதுபாண்டியன் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் தனது மகள் சுப்ரியாவை காணவில்லை என நேற்று புகார் அளித்தார். இதையடுத்து இன்று காலை தனியார் பயிற்சி மையத்திற்கு வந்த மர்ம நபர்கள், அங்கிருந்த கணினி, சேர், டேபிள் போன்றவைகளை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி மற்றும் மென்பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுறது. இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் நகர காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.