கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகாலை 4 மணி முதலே வரிசையில் காத்திருந்து மக்கள் மருந்து வாங்கி செல்கின்றனர்.
கொரோனா தொற்றுக்கு ஆளாகி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் திறக்கப்பட்டு அரசே மருந்தினை விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் இந்த ஒரு மையத்தில் தான் ரெம்டெசிவிர் விற்பனை நடைபெறுவதால் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது.
இன்றும் சென்னை மட்டும் இல்லாமல் வேலூர், கடலூர், கோவை, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். எனவே 4 கவுன்ட்டர்கள் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற நோக்கில் நூற்றுக்கணக்கான மக்கள் 8 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர். கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் ஆதார் எண், மருந்து சீட்டு, சி.டி.ஸ்கேன் மற்றும் மருந்து வாங்க வந்தவரின் ஆதார் எண் ஆகியவற்றை கொடுத்து ரெம்டெசிவிர் மருந்தினை வாங்கிச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.