கிருஷ்ணகிரியில் ஒரு மாத கால தடைக்குப் பின் நடைபெற்ற மாட்டுச் சந்தையில், மாடுகள் நல்ல விலை போனதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்துள்ள குந்தாரப்பள்ளியில் நடைபெறும் மாடுகள் விற்பனை சந்தை மிகவும் பிரபலமானவை. மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியிலிருந்து இங்கே விற்பனைக்காக கொண்டு வரும் நாட்டு மாடுகள், தரமாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் இங்கு மாடுகளை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் எளிதில் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக கருதி, மாடுகளை சந்தைப்படுத்தி விற்பனை செய்ய கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதனால் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக குந்தாரப்பள்ளி மாடுகள் சந்தை மூடப்பட்டது.
இதனையெடுத்து, மாட்டுச் சந்தைக்கு விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நேற்று விலக்கிக் கொண்டது. இதனால் இன்று மீண்டும் குந்தாரப்பள்ளி மாட்டுச்சந்தை துவங்கி விற்பனை களைகட்டியது. விரைவில் கொண்டாடப்பட உள்ள தமிழர் தைத்திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று மிக அதிக அளவில் வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு அழைத்துவந்தனர். இதேபோல் வெளி மாவட்டங்களிலும் மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
குந்தாரப்பள்ளி சந்தையில் இன்று குறைந்தபட்சம் ரூபாய் 20 ஆயிரம் முதல் 1 லட்சத்தி பத்தாயிரம் வரையில் மாடுகள் விலை போனதாகவும் இன்று ஒரு நாள் மட்டும் ரூபாய் 5 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்று உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.