தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக, பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அமைச்சர் ஒருவரும், டிஜிபியும் வழக்கு விசாரணையில் தலையிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை என பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான மனுத்தாக்கல் செய்துள்ளார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஒரு அமைச்சரும், டிஜிபியும் விசாரணையில் தலையிடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளதுடன், குறிப்பிட்ட 4 வழக்குகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கூடுதல் டிஜிபி ஆர்வம் காட்டுகிறார் என்றும், வழக்குகளில் அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பல மாவட்டங்களின் வழக்குகள் மாற்றப்படவில்லை என்றும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்குக்கான வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அரசு அதிகாரிகள் தொடர்ந்து அவமதித்து வருவதால், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.