உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் தலைமை காவலரை நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் நிதி வழங்கி வாழ்த்தினார்.
சென்னை, அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் புருஷோத்தமன். இவர் கடந்த 2000 ஆண்டு முதல் தொடர்ந்து தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 8 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றுள்ளார். காவல் துறையினருக்கான அகில இந்திய போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தலைமை காவலர் புருஷோத்தமன் வருகிற 01.10.2021 முதல் 07.10.2021 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள தாஷ்கண்ட்டில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதனையறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், புருஷோத்தமனை நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன், உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள ரூ.75 ஆயிரம் பணத்தை வழங்கி, வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.