கோவையில் உடல் முழுவதும் தோல் உரிந்த நிலையில் வந்த நபரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் குணப்படுத்தி அசத்தியுள்ளனர்.
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் தோல் முழுவதும் உரிந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை எரிசனம்பட்டியை சேர்ந்த முருகவேல் (35), என்பவர் அனுமதிக்கப்பட்டு 45 நாட்கள் கழித்து தற்போது முழுவதும் குணமாகி வீடு திரும்புகிறார்.
இது குறித்து கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும் போது:-இந்த நோயின் பெயர் டாக்சிக் எபிடெர்மெல் நெக்ரோலைசிஸ் (Toxic Epidermal Necrolysis). இந்த நோய், மாத்திரை ஒவ்வாமை மற்றும் கிருமி தொற்றினால் ஏற்படும். உடலில் சிவப்பு கொப்பளங்கள் தோன்றி பின் தோல் உரிந்து வரும். வாய், ஆசனவாய் போன்ற இடங்களிலும் புண் ஏற்படும்.
தோல் முழுவதும் உரிந்து வந்த நிலையில், பிற கிருமிகளின் தொற்று ஏற்பட்டு, உள் உறுப்புகள் செயல் இழக்க நேரிடும். இதனால் 50 முதல் 80% இறப்பு நேரிட வாய்ப்புள்ள போதும், இந்த நிலையில் இவருக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவர்கள், செவிலியர்கள் அவரை தனி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து அரசாங்கத்தின் மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் வீடு திரும்புகிறார். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்காக ரூ.8 முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் நிலையில் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்த நோயாளிக்குக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதே போல் பொதுமக்கள் அனைவரும் மருத்துவர் ஆலோசனையின்றி வலி மாத்திரையோ, வேறு மாத்திரைகளையோ உட்கொள்ள கூடாது. தோலில் கொப்புளம், ஊறல், வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் உடனே கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் பிரிவில் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நோயாளியின் உயிரை மீட்டுக் கொடுத்த தோல் பிரிவு தலைவர் மருத்துவர் முத்துக்குமரன் மற்றும் பிற மருத்துவர்களையும், செவிலியர்களையும் மருத்துவமனை முதல்வர் பாராட்டினார்.
-கோவை பிரவீண்
இதையும் படிக்கலாமே: அதிக தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? அலெர்ட்!