குப்பைத்தொட்டியில் கிடந்த தங்கநகை பையை நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்த துப்பரவு பணியாளரை சென்னை மாநகராட்சி காவல்ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை கொருக்குப்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த மோகன சுந்தரம் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை கண்ணன் தெரு பகுதியில் குப்பைகளை தரம்பிரித்து கொண்டிருந்த மோகன், ஒரு கைப்பையை கண்டெடுத்ததாகத் தெரிகிறது. அதைப்பிரித்துப் பார்த்த போது, அதில் நகைகள் இருப்பது தெரியவந்தது.
அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அந்தப்பையை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று கொடுத்துள்ளார். காவலர்கள் பையை ஆய்வு செய்த போது அதில் 10 சவரன் நகை இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரங்கநாதபுரம் குடிசைப் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகளை காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை அழைத்து விசாரணை நடத்தியதில், வீட்டை சுத்தம் செய்யும் போது குப்பையோடு குப்பையாக நகைப்பையையும் குப்பையில் போட்டது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து நகைப்பை மூதாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. நகைப்பையை வாங்கிய முனியம்மாள் மோகன சுந்தரத்திற்கு கண்ணீரோடு நன்றி தெரிவித்தார். நேர்மையாக நகைகளை ஒப்படைத்த மோகன சுந்தரத்தை காவல்துறையினர் பாராட்டினர்.
மோகன சுந்தரம் கூறும் போது, “ திருமணத்தை வைத்து கொண்டு இது போன்று பொறுப்பில்லாமல் செயல்படுவது சரியில்லை. தங்க நகைகளை பார்த்ததும் எனக்கு ஆசை ஏதும் வரவில்லை. காவல் நிலையத்தில் கொடுத்து விட்டேன் அவ்வளவு தான். காவல் ஆணையருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
மோகனசுந்தரத்திற்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலும் மோகன சுந்தரத்தை நேரில் அழைத்து பாராட்டினார். சமூக வலைதளங்களிலும் மோகன சுந்தரத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.