பல்லாக்குத் தூக்கும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதன் மூலம் ஆன்மிக அரசு என்று நான் சொன்னதை தற்போது தமிழக முதல்வர் மெய்ப்பித்துள்ளார் என தருமபுரம் ஆதினம் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தர்மபுரம் அதினம் உள்ளது . இந்த ஆதினத்தில் வருகின்ற 22ஆம் தேதி பட்டணப் பிரவேச விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத்தினர் மனு கொடுத்ததால் தடைசெய்யப்பட்டது.
இந்த நிலையில், பல்வேறு ஆதினங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் நேற்றைய தினம் பல்வேறு ஆதினங்கள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் இன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை உத்தரவை திரும்பப் பெறுவதாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தருமபுரம் ஆதினம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்...
பட்டணப் பிரவேசம் நிகழ்வுக்கான தடையை நீக்க ஆதரவு தெரிவித்த அனைத்து பக்தர்களுக்கும் மற்றும் நடவடிக்கை எடுத்த முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் உள்ளிட்ட அனைவருக்கும் நல்லாசிகள் ஏற்கனவே ஆன்மிக அரசு என்று நான் சொன்னதை தற்போது தமிழக முதல்வர் மெய்பித்துள்ளார் என தெரிவித்தார்.