சென்னை சில்க்ஸ் நிறுவனம் ஒரு பார்வை: தீ விபத்தும், விதிமுறை மீறலும்

சென்னை சில்க்ஸ் நிறுவனம் ஒரு பார்வை: தீ விபத்தும், விதிமுறை மீறலும்

சென்னை சில்க்ஸ் நிறுவனம் ஒரு பார்வை: தீ விபத்தும், விதிமுறை மீறலும்
Published on

சென்னையில் தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ பிடித்து எரிந்து, கட்டிடம் சரிந்து விழுந்து, ஏறக்குறைய முக்கால்வாசி நாசமாகியுள்ளது. இந்தக் கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டது என்று தகவல்கள் வெளிவருகின்றன.

1962 ஆம் ஆண்டும் குழந்தைவேல் முதலியார் மற்றும் அமுக்குராஜா முதலியார் ஆகியோர் ஜவுளி உற்பத்தி தொழிலில் கால் பதித்தனர். 1991 ஆம் ஆண்டு திருப்பூரில் குமரன் சில்க்ஸ் என்ற பெயரில் ஒரு துணிக்கடையை ஸ்தாபித்தனர். பின்னர் அதையே தி சென்னை சில்க்ஸ் என்று 2001 ஆம் ஆண்டு பெயர் மாற்றினர். தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் தமிழகத்தில் பல நகரங்களில் பல கிளைகளை திறந்தனர். மேலும் அயல்நாடுகளுக்கு துணிகளை பெருமளவில் ஏற்றுமதியும் செய்கின்றன. தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ள தி சென்னை சில்க்ஸ் கடைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தி சென்னை சில்க்ஸ், சென்னை, வேளச்சேரி, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருப்பூர், கரூர், கொச்சி, திருநெல்வேலி, வேலூர், சேலம், ஓசூர், விழுப்புரம், ஈரோடு மற்றும் சித்தூர் உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன.

இந்நிலையில் ((31-05-2017)) நேற்று காலை 4.45 மணிக்கு சென்னை உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள், மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. அதனால் அப்பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டது. தீயை கட்டுப்படுத்த முடியாததற்கு, ஜெனரேட்டர்களுக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த அதிகப்படியான டீசலில் தீ பிடித்ததே காரணமாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் கட்டிடம் முக்கால்வாசி இடிந்து நாசமானது. இதில் ரூ.300 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதமடைந்த மீதமுள்ள கட்டிடத்தை முழுவதும் இன்னும் 3 நாட்களில் அகற்றவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி சேலத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கிளையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தீ விபத்து ஏற்பட்ட தி சென்னை சில்க்ஸ் கட்டிடம், கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தீ விபத்திற்குள்ளான கட்டிடம் வீதிமீறலால் 2011 ஆம் ஆண்டு சிஎம்டிஏ அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம் அனுமதி இன்றி கட்டப்பட்டது என சிஎம்டிஏ சார்பில் நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டது. கட்டிட நிறைவு சான்றிதழை சென்னை சில்க்ஸ் அரசிடம் பெறவில்லை.

அவர்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று தொடர்ந்து கடையை நடத்தி வந்தனர். விதிமீறல் கட்டிடங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கட்டிடங்கள் இருக்கக்கூடாது. தி.நகர் கட்டிட விதிமீறல் பிரச்னை 20 ஆண்டுகளாக உள்ளது.

தியாகராய நகரில் உள்ள கட்டிடங்களை வரைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 4 அடுக்கு மாடிக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 8 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. முதல் அமைச்சருடன் ஆலோசனை நடத்தி விதிமுறை மீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com