சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை தவிர, அதனுடன் இதர நகரங்களுக்கு அறிவிக்கப்பட்ட மூன்று மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்படும் இந்த இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து.
2021-22 பட்ஜெட்டில் சென்னையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 14 ஆயிரத்து 788 கோடி ரூபாய் நிதியும், கொச்சி மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ஆயிரத்து 957 கோடி ரூபாய் நிதியும், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 5 ஆயிரத்து 976 கோடி ரூபாய் நிதியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையை தவிர, இதர மூன்று மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. அதன்படி, கொச்சி, பெங்களூரு, நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, மொத்தமாக 18 ஆயிரத்து 978 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.