நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளங்குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கொல்லிமலை பகுதியில் சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளங்குழந்தைகளை முறைகேடாக விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்டதாக ஓய்வுப் பெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் தரகர்களாக செயல்பட்டவர்கள் என 12 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே ராசிபுரம் மற்றும் கொல்லிமலை சுற்றுவட்டாரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆராயும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டபோது, 20 குழந்தைகள் மாயமான அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த சூழலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் சிபிசிஐடி ஆய்வாளர் சாரதா தலைமையில் செங்கரை, பவர்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக, எந்தெந்த பெற்றோரிடம் குழந்தைகள் இல்லை என்ற பட்டியலை தயார் செய்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை எதற்காக விற்கப்பட்டது, யாரிடம் கொடுக்கப்பட்டது, அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது குறித்து, சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் விசாரிக்கப்படுவதாக கூறுப்படுகிறது.
மேலும் கடந்த 4ஆம் தேதி நாமக்கல் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ரமேஷிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கொல்லிமலை பகுதியில் பல குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையிலே, கொல்லிமலை பகுதியில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக பல நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.