நீலகிரியில் குலதெய்வம் கோயிலுக்கு 7 வயது சிறுவனை பூசாரியாக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நெடுக்காட்டு கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோவிலில் பூஜை உள்ளிட்ட விழாக்களை அந்த இன மக்களே செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 1994ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் கொண்டு வரப்பட்டதாகவும், அந்த கோயிலுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது சிறுவனை பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இதுபோல பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியவில்லை. உணவை அவர்களே சமைத்து சாப்பிடுவது, கோவில் பசுக்களின் பாலை கறந்து நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றால் கல்வி தடைப்படுகிறது. இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அதிகாரிக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீலகிரி கல்வித் துறை அதிகாரி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கெத்தை அம்மன் கோயிலுக்கு பல நூற்றாண்டுகளாக 5 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களை பூசாரியாக நியமித்து வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த சடங்குகளை உடைக்க முடியாது. சிறுவனுக்கு தொடர்ந்து கல்வி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கிற்கு இந்த சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.