செய்தியாளர்: மணிகண்டபிரபு
கடந்த 15ம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்காக மதுரை வண்டியூர் டோல்கேட் வழியாக சென்ற டிடிஎப் வாசன் செல்போன் பேசியபடி காரை இயக்கியதோடு அதனை தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்நிலையில் சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக டிடிஎப் வாசன் மீது 8 பிரிவின் கீழ் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் பிணையில் வெளிவரமுடியாத வகையில் காவல்துறை பதிவு செய்த 308 பிரிவை மதுரை மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்து ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து வாசனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 3ம் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர்களுடன் வந்த டிடிஎப் வாசன் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் நாளை மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராக காவல்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது. அந்த நோட்டீசில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தனது செல்போனுடன் விசாரணைக்கு தவறாது ஆஜராக வேண்டும் என அண்ணாநகர் காவல்நிலைய ஆய்வாளர் இன்று முறைப்படி சம்மன் வழங்கினார்.
நாளை டிடிஎப் வாசனிடம் 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் காரை இயக்கியது எப்படி? எல்எல்ஆர் பெற்றது எப்படி? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் வெளியே வந்த டிடிஎப் வாசனை காண சிறார்கள் ஏராளமானோர் கூடினர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர்.
இந்நிலையில் டிடிஎப் வாசனை கண்டதும் சிறுவன் ஒருவ்ர் கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து காவல்நிலையத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி தனது ரசிகர்களை சந்தித்த டிடிஎப் வாசன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து சாலையில் நடந்து சென்ற பெண்களும் டிடிஎப் வாசனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து டிடிஎப் வாசனின் வழக்கறிஞர் அவரை வேகமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.