அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்பி மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் மற்றும் போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், வேட்பு மனுவில் தங்களது சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை அளித்ததாக தேனியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானி என்பவர் எம்.பி. எம்.எல்.ஏ-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
அந்த வழக்கின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் மீது குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்ய கடந்த 7ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து மனுதாரரான முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளருக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் ஆகிய இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இபிகோ 156 (3) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.