ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே காலையில் திருமணம் நடந்த நிலையில், மாலையில் புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்ததால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இளஞ்செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் குடியேறினர். இந்நிலையில் பூர்வீக கிராமமான இளஞ்செம்பூருக்கு வந்து தனது மகனுக்கு திருமணம் செய்யும் நோக்கில் மலைச்சாமி குடும்பத்தினர் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அதே பகுதியைச்சேர்ந்த பெண்ணுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டு, கடந்த 24 ஆம் தேதி காலை மலைச்சாமியின் மகன் விக்னேஸ்வரனுக்கு திருமணம் நடைபெற்றது.
பின்னர், விருந்துக்காக மணமகள் வீட்டுக்கு அன்று மாலை சென்றுள்ளனர். இந்நிலையில், விக்னேஸ்வரனுக்கு பால், பழம் கொடுத்துள்ளனர். அப்போது மணமகன் விக்னேஸ்வரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருமணம் முடிந்த அன்றே மணமகன் உயிரிழந்தது மணமக்கள் வீட்டாரையும், அப்பகுதி கிராம மக்களையும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.