இணையதளத்தை பார்த்து செல்போன்கள் திருடிய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 7 லேப்டாப், 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள செல்போன் கடை மற்றும் பள்ளிகளில் செல்போன்கள், லேப்டாப் ஆகியன திருடு போயிருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்கலாமே: பத்தாம் வகுப்பு படித்துவிட்டு போலி ஆர்டிஓ அலுவலராக வலம் வந்தவர் கைது
விசாரணையில், செல்போன், லேப்டாப் மீது உள்ள ஆசையில் யூடியூப் சேனலை பார்த்து பூட்டை எப்படி உடைப்பது, எப்படி திருடுவது என கற்றுக் கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 7 லேப்டாப், 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போலீசார் அனுப்பினர்.