சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கொரோனோ நிதியாக வழங்கிய சிறுவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார்.
மதுரையை சேர்ந்த சிறுவன் ஹரீஸ்வர்மன் சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியது குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். இது மட்டுமன்றி மதுரை மாநகர திமுகவினர் சார்பில் சிறுவனுக்கு சைக்கிளும் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
முன்னதாக, மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன் ஹரிஸ்வர்மன் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலை மூலமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்ததோடு தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்து கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
’
இது குறித்து அவர், “ரெண்டு வருசமா சைக்கிள் வாங்க கொஞ்சம் கொஞ்சமா உண்டியல்ல சேத்து வச்சிருந்த பணத்த, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுக்கலாமான்னு அப்பாகிட்ட கேட்டேன். அப்பா சரின்னு சொன்னாங்க. உடனே உண்டில்ல இருந்த பணத்த ஸ்டாலின் தாத்தாவிற்கு அனுப்பினேன்” என்றார்.