வீட்டில் கோபித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சுற்றிய சிறுவனை மீட்ட போலீசார், அறிவுரைகள் வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளான். அவனிடம் விசாரணை செய்ததில் சிறுவன் முன்னுக்குப் பின்முரணாகப் பேசியதாகத் தெரிகிறது.இதனையடுத்து போலீசார் சிறுவனைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுவன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள புவனகிரியைச் சேர்ந்த ஓட்டுநர் சாந்தமூர்த்தி மகன் வெற்றிச்செல்வன் என்பதும் அவன் அதே பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 5 வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் இன்று காலை பெற்றோருடன் சண்டையிட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் வழித் தவறி சாலையில் சுற்றித்திரிந்ததும் தெரிய வந்தது.இதனையடுத்து சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்திற்கு வந்த பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். சிறுவன் செல்லும் முன்பு போலீசார் அவனுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன், நோட்டு,பேனா, பிஸ்கெட் பொட்டலங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி அனுப்பி வைத்தனர்.