சிவகங்கை மாவட்டத்தில் பொது பாதையில் பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு எழுந்ததால் 3 நாட்களாக வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்த உடலை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து மாற்று பாதையில் எடுத்து சென்று அடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மணலூர் கிராமத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த காண்டீபன் என்பவர் வயது முதுமை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி உயிரிழந்தார். மயானத்திற்கு அவரது உடலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கான்டீபன் உடல் குளிரூட்டப்பட்ட பெட்டியிலேயே வீட்டில் வைத்திருந்துள்ளனர். இதையடுத்து இறந்தவர் உடலை, மணலூர் கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்கு மேலத் தெருவில் இருந்து ஜோதிபுரம் வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், நல்ல முறையில் உடல் தகனம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பிரச்சினைக்குரிய பொதுப்பாதை வழியாக உடலை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்துடன், உடலை மேலத்தெரு வழியாக மயானத்திற்கு கொண்டு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் 3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த கான்டீபன் உடலை மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.