”யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும்” என்று எல்.முருகன் சொல்வது ஏன்?

”யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும்” என்று எல்.முருகன் சொல்வது ஏன்?
”யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும்” என்று எல்.முருகன் சொல்வது ஏன்?
Published on

தமிழகத்தில் தங்கள் கூட்டணீயில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் எடப்பாடி தொகுதியில் தனது பரப்புரையை தொடங்கினார். 

இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்முருகன் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை தலைமைதான் முடிவு செய்யும் என கூறினார். இது குறித்து அவர் கூறும்போது, “யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும். தற்போதைய கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தொடரும்.ஆனால் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என தலைமைதான் முடிவெடுக்கும்” என்றார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. அப்போதும், யார் தலைமையில் கூட்டணி என்ற சிக்கல் எழுந்தது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில்தான் கூட்டணி என்று முதலில் பாஜக தரப்பில் பேசப்பட்டது. பின்னர், அதிமுக அதிருப்தியை வெளிப்படுத்தவே தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பது திட்டவட்டமானது. 

அதேபோல், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுமா இல்லையா என்பது குறித்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை கூட்டணியில்தான் உள்ளோம் என்று சொல்லும் கூட்டணி கட்சிகள் திட்டவட்டமாக சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணியை அறிவிக்காமல் காலம்தாழ்த்தி வருகின்றன. 

இதனிடையே, முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாகவும் அதிமுக - பாஜக இடையே தொடர்ந்து முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. பாஜக தரப்பில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டு வந்த நிலையில்தான் அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், பாஜக தரப்பில் எல்.முருகன் மீண்டும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தங்களது தலைமைதான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றால் வேறு வழியே இல்லை அதிமுக யாரை கைகாட்டுகிறதோ அவர்தான் முதல்வர் வேட்பாளர். அதிமுக ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமியை கைகாட்டிவிட்டநிலையில், பாஜகவின் கருத்து இருதரப்பினரிடையே இன்னும் கூட்டணி குறித்த ஒத்த கருத்து வரவில்லை என்பதையே காட்டுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com