''எதிர் மனுதாரராக சேர்க்கவேண்டும்'' : விசாரணை ஆணைய வழக்கறிஞர் மனு
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சதி செய்ததாக கருதி முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவ் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை வழக்கின் எதிர் மனுதாரர்களாக சேர்க்க ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் ஜாபருல்லா கான் மனு செய்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கான சிகிச்சை விவரங்கள், வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட தகவல்களை அப்போது முதல்வரின் பொறுப்புகளை கவனித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் எழுத்து மூலம் அளித்துள்ளதாக ராமமோகன் ராவ் ஆணையத்தில் தெரிவித்திருந்ததாக ஜாபருல்லா கான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவ்வாறான தகவல்கள் எதுவும் ராமமோகன் ராவிடம் இருந்து அரசுக்கு வரவில்லை என தற்போதைய தலைமைச் செயலாளர் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். எனவே இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் அது இந்திய மருத்துவர்களை அவமதிப்பதாகும் என தெரிவித்திருந்தார் என ஜாபருல்லாகான் கூறியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை தகவல்களை அமைச்சர்களிடம் ராமமோகன் ராவ் தெரிவித்திருந்தால் மேல் சிகிச்சைக்கான நடவடிக்கைகள் குறித்து அவர்கள் முடிவு செய்திருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அனைத்தும் சசிகலாவுக்கும் ராமமோகன் ராவுக்கும் மட்டுமே தெரியும் என்றும் சிகிச்சைக்கான ஒப்புதல் உள்ளிட்ட சுமார் 20 ஆவணங்களில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். எனவே இவ்விருவரையும் முக்கிய பொறுப்புள்ளவர்களாக ஆணையம் கருதுவதாகவும் வழக்கறிஞர் ஜாபருல்லா கான் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு இதயம் செயலிழந்த பிறகு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன்னுக்குப்பின் முரணான சாட்சியம் அளித்திருக்கிறார்கள் என ஜாபருல்லா கூறியுள்ளார்.
இந்நிலையில் ராமமோகன் ராவையும் ராதாகிருஷ்ணனையும் சதி செய்துள்ளதாக கருதி எதிர் மனுதாரர்களாக ஆணைய விசாரணையில் சேர்க்க வேண்டும் என மனுவில் ஜாபருல்லா கான் தாமாக முன் வந்து கூறியுள்ளார். இவ்வழக்கில் சசிகலா மற்றும் அப்பலோ மருத்துவமனை ஏற்கனவே எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.