வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு போரூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் தேமுதிக சார்பில் ஏழை மக்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா பேசும்போது...
“அனைவருக்கும் தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மத நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில், ‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு‘ என்ற வகையில் எல்லா வருடமும் இதை செய்கிறோம்.
சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எங்கு இருக்கிறதோ அங்குதான் வெற்றி நிச்சயம் என்பதை இந்த நாளில் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக-வை பொருத்தவரை தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தேமுதிக தேர்தல் பரப்புரையை தொடங்க தயாராக இருக்கிறோம். மக்களுக்காக பணிபுரியும் மகத்தான வாய்ப்பு தேமுதிக-வுக்கும் அதன் கூட்டணிக்கும் அமையும் என்பதை நம்புகிறோம்.
எம்ஜிஆர் எல்லார் மனதிலும் இடம் பிடித்தவர். அரசியலுக்கு வருபவர்கள் எம்ஜிஆர் பற்றி சொல்லுகிறார்கள். விஜயகாந்த் எப்போதும் தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று சொன்னது கிடையாது. தொண்டர்களும் மக்களும் கொடுத்த பட்டம்தான் கருப்பு எம்ஜிஆர். எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு உதவி செய்கின்ற ஒரே தலைவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் பற்றி உரிமை கொண்டாடுபவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்பது கேள்விக்குறி.
தேர்தல் பணி என்பது புதிது அல்ல. புத்தாண்டுக்கு பின் செயற்குழு, பொதுக்குழுவிற்கு பிறகு தமிழகம் முழுவதும் தேமுதிகவின் பரப்புரையை இருக்கும். அதிமுகவில் இருந்து தேர்தல் பரப்புரைக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஆனாலும் எங்கள் பணியை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்’‘ எனத் தெரிவித்தார்.