பூவிருந்தவல்லியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் குட்டிக்கர்ணம் அடித்து நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், தேர்தலின்போது உறுதி அளித்தபடி திமுக பல அறிவிப்புகளை செயல்படுத்தவில்லை” என்று அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான, இ.பி.எஸ். ஓ.பி.எஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து அதிமுக நகரக் கழகம் சார்பில் நகரச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் 100-க்கும் மேற்பட்டோர், திமுகவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
அதேபோல் ஒரு சிலர் திமுக அரசை கண்டித்து குட்டிக்கர்ணம் அடித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.