விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஹயக்ரிவாஸ் மற்றும் ஜேசிஐ தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கிய உயிர் காக்கும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்தை உதவி ஆட்சியர் தினேஷ்குமார் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
சிவகாசியில் உள்ள ஹயக்ரிவாஸ் சர்வதேச பள்ளியும், சிவகாசி ஜேசிஐ டைனமிக்கும் இணைந்து ஐந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் வசதியுடன் கூடிய பள்ளிப் பேருந்தை தற்காலிக கொரோனா வார்டாக மாற்றி சிவகாசி அரசு மருத்துவனைக்கு வழங்கியுள்ளனர். இந்த பேருந்தில் 3.25 லட்சம் மதிப்புள்ள ஐந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரே நேரத்தில் பத்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க முடியும். மேலும் காற்றோட்டத்திற்காக மின்விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து கொரோனா தொற்று முடியும் வரை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் சிவகாசி சார்ஆட்சியர் தினேஷ்குமார் ஐஏஎஸ், சிவகாசி அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.