சென்னை ரெட்டேரி அருகே 35 மூட்டைகளில் பழைய ரூபாய் நோட்டுகள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் அடுத்த ரெட்டேரி பகுதியில் ஆட்டுதொட்டி என்ற இடம் உள்ளது. அப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடப்படும் இடமாக இது இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தகவலறிந்து வந்த மாதவரம் காவல்துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டனர். பின் சோதனையின் போது அந்தப் பகுதியில் 35 மூட்டைகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவை அனைத்தையும் பறிமுதல் செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பண மதிப்பு நீக்கத்திற்குப் பின் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாததால் யார் இதனை செய்தது எனக் காவல்துறை தீவர விசாரணை செய்து வருகின்றனர்.