தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு முந்தைய நாள் எண்ணிக்கையை விட ஆயிரம் பேர் அதிகம் என்கிற அளவிற்கு தொற்று பரவி வரும் நிலையில் இதன் வீரியம் எப்படி அதிகரித்து வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி கொரோனா தொற்றால் முதல் நபர் பாதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 85 நாட்களுக்கு பிறகு அதாவது மே 31ஆம் தேதி தொற்றுக்கு ஆளானார் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியது. அடுத்து 17 நாட்கள் கடந்து ஜுன் 17ஆம் தேதி 2 ஆயிரமாகவும் அதிலிருந்து 8 நாட்களில் மேலும் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 3 ஆயிரமாகவும் ஒருநாள் பாதிப்பு அதிகரித்தது. பின்னர் ஒரே வாரத்தில் தமிழ்நாட்டில் ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரம் என்ற அளவை எட்டியது. அடுத்து 20 நாட்களுக்கு பின்னர் ஜுலை 22ஆம் தேதி ஒரே நாளில் 5 ஆயிரம் பேரும், அதற்கு அடுத்த நாளே ஒரே நாளில் 6 ஆயிரம் பேர் என்ற அளவிலும் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவேகமாக அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 8ஆம் தேதி 464 பேர் என்ற அளவில் இருந்த நிலையில், 39 நாட்கள் கழித்து மார்ச் 19ஆம் தேதி மீண்டும் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை எட்டியது. அடுத்து 8 நாட்களில் 2 ஆயிரமாகவும் 6 நாட்களில் 3 ஆயிரமாகவும் மேலும் 6 நாட்களில் 4 ஆயிரமாகவும் ஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளது. பின்னர் ஏப்ரல் 9 ஆம்தேதி ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு நாட்களில் ஏப்ரல் 11ஆம் தேதி 6 ஆயிரம் பேரும் ஏப்ரல் 14ஆம் தேதி புதிய உச்சமாக 7 ஆயிரம் பேர் என்ற அளவிலும் தொற்று அதிகரித்துள்ளது.
தற்போது ஒருநாளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஒருநாள் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்குகிறது. அதுவே 2 லட்சம் பேருக்கு சோதனை செய்யப்பட்டால் ஒருநாள் பாதிப்பு 16 ஆயிரம் என்று இருக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே பரிசோதனையை அதிகப்படுத்துவதோடு பாதித்தவர்களை விரைவாக கண்டறிந்து தனிமைப்படுத்துவதே சிறந்தது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.