டிக்கெட் எடுக்க மறுத்த இளைஞர் ஒருவர் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலத்தில் இருந்து மதுரைக்கு வந்த அரசுப் பேருந்தில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். அப்போது இளைஞரிடம் டிக்கெட்டுக்காக நடத்துனர் பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர் டிக்கெட் வாங்க முடியாது எனத் தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் மதுரை மீனாட்சி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்தி நடத்துநர் அந்த இளைஞரை இறக்கி விட்டுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த இளைஞர், கற்களைக் கொண்டு பேருந்தின் கண்ணாடியை உடைத்து விட்டு ஓட முயன்றுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகளும் பொதுமக்களும் அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததில் ஒரு பயணி மற்றும் நடத்துநர் காயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து அந்த இளைஞரை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.