ரஜினி கட்சியில் இருக்கும் அர்ஜுன மூர்த்தி தனது தந்தையின் அரசியல் ஆலோசராக இருந்தவர் என்ற செய்தி தவறானது என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கட்சி தொடங்குவதாகவும் அதற்கு செயற்பாட்டாளராக தமிழருவி மணியனையும் கட்சி ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும் அறிமுகம் செய்தார் ரஜினி. இதையடுத்து பாஜக நிர்வாகியாக இருந்த அர்ஜுன மூர்த்தி கவனம் பெற்றார். இதையடுத்து பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து அர்ஜுன மூர்த்தி விடுவிக்கப்படுவதாக பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே அர்ஜுன மூர்த்தி, முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என செய்தியும் பரவியது.
இதுகுறித்து தயாநிதி மாறன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்தால் துவங்கப்படவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, எனது தந்தை மறைந்த முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். அது போன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை. இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.