மதுரை மாநகராட்சி 88-வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு உதவிய திமுகவினருக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 88வது வார்டு திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளராக சகுந்தலாவும், அதிமுக சார்பில் பிரேமாவும், அமமுக, பாஜக, நாம்தமிழர், மக்கள் இயக்கம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் உள்ளிட்ட எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்த அதிமுக வேட்பாளர் பிரேமா 1,187 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
மதுரை மாநகராட்சி 88வது வார்டு திமுகவின் கோட்டையாக இருந்த நிலையில், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. "இதனால் திமுகவினர் உரிய முறையில் வேட்பாளருக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ளவில்லை. இதையடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு 88வது வார்டு அதிமுக வசம் சென்றதாக" ஒரு பேச்சும் இருந்தது.
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பிரேமாவை வெற்றிபெற செய்து பதவி ஏற்க உதவிய திமுகவினருக்கு நன்றி தெரிவிப்பதாக வார்டுக்கு உட்பட்ட பகுதி முழுவதிலும் அதிமுகவினர் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சி வேட்பாளருக்கு எதிராக திமுகவினர் செயல்பட்டதாக கூறும் வகையில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர் மதுரையில் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.