8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை நாகாலாந்தில் கண்டுபிடித்த புதுக்கோட்டை போலீஸார்!

8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை நாகாலாந்தில் கண்டுபிடித்த புதுக்கோட்டை போலீஸார்!
8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை நாகாலாந்தில் கண்டுபிடித்த புதுக்கோட்டை போலீஸார்!
Published on

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நபரை நாகாலாந்து மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் மீட்டு வந்து அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் காலனியை சேர்ந்தவர் குமாரவேல். தற்போது 50 வயதாகும் இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு தொடர்ந்து அவரை தேடும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் அவர் எங்கே சென்றார் எப்படி இருக்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் தெரியாமல் அவரது குடும்பத்தினருக்கு தவிப்பிற்கு உள்ளாகினர்.


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பாலாஜி சரவணனிடம் இது குறித்த புகாரை குமாரவேலன் உறவினர்கள் கொடுத்தனர். புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த எஸ்.பி.பாலாஜி சரவணன் குமாரவேலுவை தீவிரமாக தேடி கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.


இதையடுத்து தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கும் குமாரவேலின் படத்தை அனுப்பி அவரை பற்றிய தகவல் இருந்தால் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில்தான் போலீசாரின் இந்த முயற்சிக்கு மகிழ்வான செய்தி ஒன்றும் வந்து சேர்ந்தது. குமாரவேல் நாகலாந்து மாநிலத்தில் இருப்பதாக அங்குள்ள தமிழ்ச்சங்கம் மூலம் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதனையடுத்து உடனடியாக சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினரை நாகாலாந்து மாநிலத்திற்கு அனுப்பிய புதுக்கோட்டை எஸ்.பி.பாலாஜி சரவணன் அங்குள்ள தமிழ் சங்கம் மற்றும் நாகாலாந்து மாநில போலீசாரின் உதவியோடு அவரை பத்திரமாக மீட்டு விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். பின் இன்று காலை புதுக்கோட்டை வரவழைத்து அவரை அவரது உறவினர்களிடம் எஸ்.பி. பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.

அப்போது குமரவேலுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எஸ்.பி.பாலாஜி சரவணன் அவரை அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தபோது அவர்கள் கண்ணீர் மல்க எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வு அங்கு இருந்தவர்களை நெகிழ வைத்தது.

இது குறித்து புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் கூறுகையில், நாள்தோறும் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் கேடயம் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் சைல்டு லைன் அமைப்பினர் மூலமாகவும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com