'நன்றி பிரதமர் அவர்களே' என்ற வாசகங்களுடன் கூடிய ஒரு போஸ்டர் ஒட்ட வேண்டுமென்று அஞ்சல் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தல் வந்திருப்பது எதற்காக என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அஞ்சலகங்களில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாய் கொடுத்ததற்காக மோடிக்கு நன்றி சொல்லி போஸ்டர் ஒட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எதற்காக என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைதளமான டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்துள்ளார். அது, மூன்று விலைகள் வைத்து மாநிலங்களை அல்லாட விட்டதற்காகவா? ஒன்றிய அரசு ஒன்று இருக்கும் போது ஒவ்வொரு நாடாய் மாநில அரசுகளை தடுப்பூசி கிடைக்குமா என்று அலைய விட்டதற்காகவா? கடும் எதிர்ப்பு வந்த பிறகு தடுப்பூசி கொள்கையை திரும்பப் பெற்று அப்போதும் கூட 25 சதவீதத்தை தனியாருக்கு ஒதுக்கிய கார்ப்பரேட் பாசத்திற்காகவா?.
இந்தியாவில் உற்பத்தியான தடுப்பூசிகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு இங்கே இந்திய மக்களை தடுப்பூசி கிடைக்காமல் அலைமோத விட்டதற்காகவா? தடுப்பூசி பற்றாக்குறை வந்தவுடன் எவ்வளவு தடுப்பூசி இருக்கிறது என்பதை கூட மக்களுக்கு சொல்லக் கூடாது என மாநில அரசுகளுக்கு வாய்ப் பூட்டு போட்டதற்கா. இல்லை, உலகில் தடுப்பூசி போட்டவர்கள் விகிதத்தில் 10 வது இடத்துக்கும் கீழே இந்தியா இருப்பதற்காக...
இப்படி எத்தனையோ காரணங்களுக்காக மக்கள் மத்திய அரசை கடுமையாக வசையாடிக் கொண்டிருக்கும் போது அரசாங்க செலவில், அரசு அலுவலகத்தின் முன்னால் அரசு அதிகாரியே போஸ்டர் ஒட்ட வேண்டும் என அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ஒரு வாக்கியம் விடுபட்டுப் போயுள்ளது. மூன்றாவது அலை வருவதற்குள் இந்த போஸ்டரை ஒட்ட வேண்டும்' என்ற வாக்கியத்தை அடுத்த சுற்றறிக்கையில் சேர்த்துக்கொள்ளவும் என கிண்டல் செய்துள்ளார்.