தஞ்சை பெரிய கோயில் சிலைகள் குஜராத் சென்றதன் பின்னணி?

தஞ்சை பெரிய கோயில் சிலைகள் குஜராத் சென்றதன் பின்னணி?
தஞ்சை பெரிய கோயில் சிலைகள் குஜராத் சென்றதன் பின்னணி?
Published on

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு இன்று தமிழகம் கொண்டு வரப்பட்டன.  

கி.பி. 1010-ம் ஆண்டில் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடந்த போது, சோழ நாட்டு சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் என்பவர் ராஜராஜர் மற்றும் பட்டத்து அரசி உலகமாதேவி ஆகியோரின் சிலைகளை ஆலயத்தில் நிறுவினார். 900 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை பெரிய கோயிலில் இருந்த இந்தச் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது. கடந்த 2010-ம் ஆண்டு தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு ஆயிரமாவது ஆண்டு விழா நடைபெற்றபோது தான் சிலைகள் மாயமானது கவனத்தில் கொள்ளப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற தேடலில் மாயமான சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கௌதம் சாராபாய் பவுண்டேசன் காலிகோ அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

இந்த உலோகச் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கோயில் நிர்வாகிகளால் திருடப்பட்டு தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலச்சாரியார் என்பவர் மூலமாக சாராபாய் அருங்காட்சியத்துக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்போதைய தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு, தொல்லியல் அறிஞர் நாகசாமி, வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு குஜராத் அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்று அங்குள்ள சிலைகள் தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பதை உறுதி செய்தது. ஆனால் தமிழக குழுவின் முடிவை ஏற்க அருங்காட்சியக உரிமையாளர்கள் மறுத்து விட்டதாலும், திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்யப்படாததாலும் சிலைகளை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, 50 ஆண்டுகளுக்கு முன் பெரிய கோயிலில் இருந்து பல அரிய சிலைகள் திருடப்பட்டுள்ள‌தையும், அதுகுறித்து கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறையும் புகார் அளிக்காமல் இருந்ததையும் கண்டுபிடித்தது. இதையடுத்து விசாரணை அதிகாரியான துணை கண்காணிப்பாளர் ராஜாராம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சார்பில் தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் முறையாக புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து உரிய ஆதாரங்கள் மற்றும் உத்தரவுகளுடன் கடந்த 28-ம் தேதி குஜராத் அருங்காட்சியகத்துக்கு சென்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு சிலைகளை மீட்டு இன்று தமிழகம் கொண்டு வரப்பட்டது.  மீட்கப்பட்ட ராஜராஜர் சிலை நூறு கோடி ரூபாய் மற்றும் உலகமாதேவி சிலை 50 கோடி ரூபாய் மதிப்பும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜன், உலகமாதேவி சிலைகளை கொண்டுவந்த ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு அமைச்சர் பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழகத்தில் இருந்து காணாமல் போன ஏராளமான சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு மீட்டுள்ளது என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com