செய்தியாளர்: காதர் உசேன்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉளூர் நாடோடி பழங்குயினர் குடியிருப்பில் ஜோதி அறக்கட்டளை ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டப்பட்டது. இந்தப் பகுதியில் வசிக்கும் 102 நாடோடி பழங்குயினர் குடும்பங்களை சேர்ந்த சுமார் 300 நரிக்குறவர்கள் ஒன்றிணைந்து முதல் முறையாக தங்களது குடியிருப்பு பகுதியில் சமத்துவ பொங்கலிட்டனர்.
தமிழக முதலமைச்சரின் அறிவுரைபடி தங்களது வீடுகளின் முன்பு வண்ண வண்ண கோலமிட்டு அதில், சமத்துவ பொங்கல் வாழ்த்துகள் என்று எழுதி தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து புதிய பானைகளில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடந்தது. பங்கேற்ற நாடோடி பழங்குயினர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு விலையில்லா புத்தாடைகள் ஜோதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது புதிய ஆடைகளை அணிந்து கொண்ட நாடோடி பழங்குயினர் சமபந்தி விருந்தில் பங்கேற்றனர். முன்னதாக நடைபெற்ற சிறப்பு கலை விழாவில் ஏராளமான நாடோடி பழங்குயினர் பல்வேறு பாடல்களுக்கு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இதுவரை பொங்கல் பண்டிகையை கொண்டாடாத நாங்கள் இம்முறை ஒன்றுகூடி சமத்துவ பொங்கலிட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மேலஉளூர் நாடோடி பழங்குயினர்களின் தலைவர் செந்தில் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி மேலாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .