ஜூரமோ, தலைவலியோ இல்லை, ஏதோ ஒரு சிறிய அறுவை சிகிச்சை என எதுவாக இருந்தாலும் நாம் உடனடியாக செல்வது தனியார் மருத்துவமனைக்குதான். ஏன் அரசு மருத்துவமனைக்கு செல்வதில்லை ? அதற்கு பல காரணங்கள் இருக்கிறது, என்றாலும் ஏழை எளியோருக்கு எப்போதும் கை கொடுப்பது அரசு மருத்துவமனைதான். தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துமனை மருத்துவர்கள் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எதுவும் வெளியே தெரிவதில்லை. அப்படியொரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து சிறுவன் ஒருவனுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறார்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.
இதனை அந்த மருத்துவமனையின் டாக்டரான பிரகாஷ் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில், தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவு மருத்துவர்கள் எவ்வாறு சிறுவனின் உயிரை காப்பாற்றினார்கள் என விவரித்துள்ளார் “12 வயது சிறுவன் வயிற்று வலி பிரச்னைக்காக பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தார்கள். பரிசோதனையில் வயிறு வீங்கி இருந்தது, இதய துடிப்பு மிக அதிகமாக இருந்தது, மேலும் நீர் சத்து குறைந்து ஷாக் என்ற நிலையில் இருந்தான். உடனே அவனுக்கு நரம்பு வழியாக க்ளுகோஸும் ஆன்டி பையோட்டிக் மருந்தும் செலுத்தி ரத்த அழுத்தத்தை சரி செய்தோம். மேலும் வயிறு வீங்கி போனது ஸ்கேன் எடுத்ததில் குடல் அடைப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் காரணம் தெரியவில்லை என்றும் தெரிந்தது. ரிஸ்க் அனைத்தையும் தெளிவுப்படுத்திவிட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தோம். வயிற்றை கிழித்தவுடன் சுமார் 1 லிட்டர் அழுகிய ரத்தம் வெளியே வந்தது. பின்னர் குடல் அழுகி இருப்பதை கண்டுபிடித்தோம்”
சிறு குடல் கிட்டத்தட்ட 100 சென்டி மீட்டர் அழுகி இருந்தது. அழுகிய குடலை வெட்டி எடுத்து விட்டு, சிறு குடலையும் பெரு குடலையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும் அறுவை சிகிச்சை செய்தோம். குடல் அழுக காரணம் வாழ்வுலஸ் என்று கண்டுபிடித்தோம். அப்படியென்றால் ரத்த ஓட்டம் தடை பட்டு குடல் அழுகி போவது என்று அர்த்தம். அறுவை அரங்கம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துர்நாற்றம் வீசியது. குடல் அறுவை சிகிச்சை செய்தால் 5 நாட்களுக்கு உணவு கிடையாது. Icuஇல் வைத்து இரவு பகலாக பயிற்சி மருத்துவரும், செவிலியர்களும் கவனித்து கொண்டனர். மெதுவாக உடல் தேறியது. 6 வது நாள் காத்து பிரிந்த பிறகு தண்ணீரும், இளநீரும் கொடுக்க ஆரம்பித்தோம். சிறு குடல் 80 சதவீதம் இல்லாததால், வயிற்று போக்கு ஏற்பட்டு மிக சிரமம் ஏற்பட்டது.
9 ஆம் நாள் இட்லி, சாதம் ஆரம்பித்தோம். 11 நாள் யாரும் எதிர்பார்க்காதது நடந்தது. தையல் போட்ட தொப்புள் பகுதியில் இருந்து மலம் வர ஆரம்பித்தது. உள்ளே தைத்து வைத்த குடல் தையல் விட்டு போயுடுச்சுனு அர்த்தம். மலம் வயிற்று மேலே வருவதை பார்த்து சிறுவனின் அம்மா கதறி அழுதார். பிறகு அறுவை சிகிச்சை இல்லாமல், நரம்பு மூலம் சத்து மருந்து, மற்றும் உணவில் உள்ள சத்துக்கள் கலந்த விசேஷ நரம்பு மருந்துகள் செலுத்தியதில், தொப்புள் அருகே வந்த மலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஒரு கட்டத்தில் நார்மலாக மலம் கழிக்க ஆரம்பித்தான்.
உடல் தேறி , இன்று வீட்டுக்கு போறான் தம்பி. இது மறுபிறவி இவனுக்கு. கிட்டத்தட்ட 25 நாட்கள் எங்கள் வார்டில் இருந்துள்ளான். இவர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்லை. இந்த அறுவை சிகிச்சை மற்றும் கவனிப்பின் மதிப்பு தனியார் மருத்துவமனையில் 10 முதல் 12 லட்ச ரூபாய் இருக்கும். அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசம். இது போல அரசு மருத்துவமனையில் பல உயிர்கள் வருடம் முழுவதும் காப்பாற்றப்படுகிறது. என்ன ஒன்று.. இதை யாரும் வெளியே சொல்வது இல்லை, விளம்பரம் செய்வதும் இல்லை" என பதிவிட்டுள்ளார்.