செய்தியாளர்: ந.காதர்உசேன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்துவந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக் கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடிகள் முற்றிலும் மழை நீரில் சேதமடைந்து விளைநிலத்தில் சாய்ந்துள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை நீர் வடியாமல் உள்ளதால், மழைநீரில் பயிர்கள் மிதந்து தற்போது அழுகி, முளைக்க தொடங்கி விட்டன. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அழுகி - முளைத்த பயிருடன் விவசாயிகள் விளைநிலத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாண்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்த ஒரத்தநாடு வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன், பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெளிவுபடுத்தி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.